இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்காக பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்பதிவு முதல் தட்கல் வரை பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனுடன், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சீரான சேவைக்காகவும் ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பயணிகளை கவர்ந்துள்ளது.
அதன்படி, முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளைச் சோதனை செய்து, உரிய டிக்கெட் இல்லாமல் இருப்பவர்கள் கண்டறியப்பட்டால், ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே எடுத்துள்ள இந்த கடும் நடவடிக்கை, முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து பயணிக்கும் மக்களுக்கு நிம்மதியை அளிக்கிறது. குறிப்பாக, அதிக நெரிசல் நிலவும் ரயில்களில், பயணிகள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் செல்லும் வகையில் இந்த முடிவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே தொடர்ந்து புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவது, பயணிகளை நம்பிக்கையுடன் ரயில் சேவையை பயன்படுத்த ஊக்குவிக்கிறது.