இந்தியாவில் கடந்த 22ம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி வரி திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ள நிலையில், இன்னும் சில விற்பனையாளர்கள் பழைய விலையிலேயே பொருட்களை விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
“ஒரே நாடு, ஒரே வரி” என்ற திட்டத்தின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி முறையில் முன்பு 5, 12, 18, 28 சதவீதம் என இருந்த விகிதங்கள் தற்போது 5, 18, 40 சதவீதம் என மாற்றப்பட்டுள்ளன. 28 சதவீத வரிக்கு உட்பட்ட பல பொருட்கள் 18 சதவீத வரிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், 12 சதவீத வரிக்கு உட்பட்ட பல பொருட்கள் தற்போது 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, பால், பேஸ்ட், வீட்டு உபயோகப் பொருட்கள், வாகன காப்பீடு திட்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. பல நிறுவனங்களும் அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி சலுகைகளை நுகர்வோருக்கு முழுமையாக வழங்குவதாக அறிவித்து விலைகளையும் குறைத்துவிட்டன.
இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், வரி திருத்தத்துக்கு பிறகும் விலை குறைக்காமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யும் நிறுவனங்கள் அல்லது கடைகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1915 என்ற தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைக்கலாம். அதேபோல், 8800001915 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அனுப்பலாம். அல்லது ஒருங்கிணைந்த நுகர்வோர் குறைதீர் தளம் INGRAM மூலமாகவும் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
அரசு, அனைத்து பொருட்களின் விலை நிலவரங்களையும் கண்காணித்து வருவதாகவும், நுகர்வோர் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.