Monday, September 29, 2025

கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் தப்பிக்க என்ன செய்யலாம்?

இந்தியாவின் மக்கள் தொகை தான் நமது நாட்டின் பலமும், பலவீனமும் ஆகும். இங்கு நடைபெறும் கலாச்சார விழாக்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், சினிமா தியேட்டரில் முதல் ஷோ ஆகிய அனைத்திலும் கூட்ட நெரிசல் உருவாகுவது தவிர்க்க முடியாதது. இதுபோன்ற கூட்ட நெரிசல்களில் இருந்து பாதுகாப்பாக விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

கூட்ட நெரிசலில் இருந்து பாதுகாப்பாக தப்பிக்க சிறந்த வழி, ஆரம்பத்திலேயே அத்தகைய கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பதுதான். அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மீறி, நீங்கள் கட்டுப்பாடற்ற கூட்ட நெரிசலில் சிக்கினால், பதற்றம் கொள்ளாமல் சில முக்கிய உத்திகள் பின்பற்ற வேண்டும்.

பதற்றம் உங்கள் சக்தியையும், சிந்திக்கும் திறனையும் குறைக்கும். ஆகவே அமைதியாக இருந்து சக்தியை சேமிக்க வேண்டும்.

கூட்ட நெரிசலில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணம் கீழே விழுந்து மிதிபடுவதும் அதனால் மூச்சுத்திணறலும்தான். எனவே உங்களின் முழு கவனம் கால்களில் வலுவாக நின்றிருப்பதில் இருக்க வேண்டும்.

கூட்டம் உங்களை இருபுறமும் அழுத்தும்போது மூச்சு விடுவது கடினமாகும்போது, உங்கள் கைகளை குத்துச்சண்டை வீரரைப் போல மார்புக்கு முன்னால் வைத்து, விலா எலும்புகளுக்கும் நுரையீரலுக்கும் இடைவெளி கொடுத்து சுவாசிக்க உதவுங்கள்.

கூட்டத்தின் அழுத்தத்திற்கு எதிராகப் போராடுவது வீண். அது உங்கள் சக்தியை முற்றிலுமாக உறிஞ்சிவிடும். மாறாக, கூட்டத்தின் ஓட்டத்துடன் மெதுவாக நகர்ந்து, அதே சமயம் பக்கவாட்டில், அதாவது கூட்டத்தின் ஓரங்களை நோக்கி நகர முயற்சி செய்யுங்கள்.

கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ள இடங்களுக்கு செல்லுமுன் அவற்றின் கூட்டத்தின் அளவை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்.

கூட்டத்துக்குள் சென்றதும், உடனடியாக வெளியேறும் வழிகள் எங்கு இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவசரநிலையில் இது உதவும்.

நெரிசலின் மையத்தைத் தவிர்த்து, எப்போதும் சுவர்கள், தடுப்புகள் அருகே, கூட்டத்தின் ஓரங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களுக்குப் பல பாதுகாப்புப் பொறுப்புகள் இருந்தாலும், தனிநபராக நமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News