இந்தியாவில் தொழிலாளி முதல் அதிகாரி வரை அனைவரும் உயர்ந்த சம்பளத்தை விரும்புகிறார்கள். ஆனால், பெரும்பாலும் எதிர்பார்த்த அளவு கிடைப்பதில்லை. இதற்கு மாற்றாக, வளைகுடா நாடுகள், குறிப்பாக துபாய் மற்றும் சவுதி அரேபியாவில், அதிக சம்பளம் வழங்கப்படுவதால் அங்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
உலகின் முன்னணி ஆட்சேர்ப்பு இணையதளம் Glassdoor தரும் தகவலின்படி, துபாயில் சாதாரண தொழிலாளரின் மாத சராசரி சம்பளம் 2,000 திர்ஹாம்கள், அதாவது ரூ.45,000 ஆகும். WageCenter வெளியிட்ட அறிக்கையின்படி, சவுதி அரேபியாவில் 2023ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச சம்பளம் 600 முதல் 3,000 திர்ஹாம்கள் வரை அதாவது ரூ.13,000 முதல் 68,000 வரை. பணியாளர் தகுதி மற்றும் நிறுவனத் தேவைகளைப் பொறுத்து ஊதியத்தில் மாறுபாடு இருக்கும்.
உதாரணமாக, துபாயில் உள்ள ஓர் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிபவர்கள் மாதம் 10,070 திர்ஹாம்கள் அதாவது ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். அதேசமயம், பல் மருத்துவர் மாதம் 39,120 திர்ஹாம்கள், அதாவது ரூ.8 லட்சம் வரை வருமானம் பெறுகிறார். சர்வதேச மனித வள அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2023இல் துபாயில் சராசரி சம்பளம் 16,500 திர்ஹாம்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.7 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உயர்ந்த சம்பள வாய்ப்புகள் இருந்தாலும், அங்கு வேலை பெறும் செயல்முறையில் கவனம் அவசியம். துபாயில் வேலைக்கு விண்ணப்பிக்க, முதலில் அங்குள்ள நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது நம்பகமான ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். விசா, வேலை ஒப்பந்தம் போன்றவை தெளிவாக இருக்கும் போது மட்டுமே அங்கு செல்ல வேண்டும். தவறான வாக்குறுதிகளால் பலர் மோசடிக்கு ஆளாகியிருப்பதால், வேலை தேடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.