Sunday, September 28, 2025

அபராதம் கட்டிட்டு, ஊழலை ஒழிச்சுக்கோங்க!.., விஜய்க்கு எதிராக சூடு பிடிக்கும் களம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தை கடந்த 13ம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். அதன் பின்னர் நாகை, திருவாரூரில் மக்களை சந்தித்த அவர், இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகே விஜயின் பிரசாரம் நடைபெற, அடுத்ததாக அவர் கரூரில் மக்களைச் சந்திக்க உள்ளார். விஜய் தனது உரைகளில் திமுக அரசை அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை புறக்கணித்ததாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதற்கிடையில், விஜயின் கரூர் பயணத்தை முன்னிட்டு அங்குள்ள திமுகவினர் எதிர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கரூர் முழுவதும் திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.40 கோடி மதிப்பில் நகர மேம்பாட்டுத் திட்டங்கள் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “வாங்கண்ணா வணக்கங்கண்ணா, உங்க Fact எல்லாம் செக் பண்ணுங்க… சும்மா தெரியாம உளராதீங்க அண்ணா… தமிழ்நாட்டு வளர்ச்சியை பாருங்க அண்ணா” என, விஜயை நேரடியாக குறிவைத்து சாடும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, “ஊழலை ஒழிக்க வந்திருக்கேன்” என்கிற விஜயின் கூற்றை சாடும் வகையில், “வருமான வரித் துறைக்கு 1.5 கோடி அபராதம் கட்டிட்டு, ஊழலை ஒழிச்சுக்கோங்க” என்று வாசகங்களும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன.

இதனால், விஜயின் கரூர் பிரசாரத்தை முன்னிட்டு அங்கு அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் உரைக்கு திமுக எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனித்து வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News