தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக பிரசார பணிகளை முன்னெடுத்து வருகின்றன. தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து உரையாற்றும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
செப்டம்பர் 13ம் தேதி முதல் விஜய்யின் பிரசார சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டு துவங்கியுள்ளது. இதன் தொடக்க கட்டமாக திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தனது பிரசாரத்தை நிறைவு செய்த அவர், அடுத்த கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளை குறிவைத்து உள்ளார்.
இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் திருச்சிக்கு வந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் சென்றடைந்தார். நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகே காலை முதலே மக்கள் பெருமளவில் திரண்டனர். பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜயின் உரையை கேட்கக் திரண்டுள்ளனர்.
நாமக்கல் கூட்டத்தை முடித்த பின், விஜய் பிற்பகல் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு அவர் கார் மூலம் பயணித்து சென்றுள்ளார். அங்கு திமுக அரசை கடுமையாக விமர்சிப்பார் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
மேலும், கரூர் பகுதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படுகிறது. எனவே அவரை நேரடியாக குறிவைத்து விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரூர் விஜயின் பிரசாரத்தால் சூடுபிடித்துள்ளது.
சமீபத்தில் கரூரில் திமுகவின் முப்பெரும் விழா, அதனை தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி பிரசாரமும் நடைபெற்ற நிலையில், விஜயின் கரூர் வருகை அரசியல் பரபரப்பை மேலும் தூண்டியுள்ளது.