அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தலையிட்டு நிறுத்தியதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.பொதுச்சபையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகசெயலாளர் பெட்டல் கஹ்லோட் பேசியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் கெஞ்சியது. மே 9-ந்தேதி வரை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்களை மேற்கொண்டது. ஆனால் மே 10-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் நேரடியாக கெஞ்சியது. இதனால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எந்தவொரு பிரச்சனையிலும் எந்த 3-ம் தரப்பினரும் தலையிட இடமில்லை. பாகிஸ்தான் உண்மையிலேயே அமைதியை விரும்பினால் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அணு ஆயுத மிரட்டல் என்ற போர்வையில் பயங்கரவாதம் நடைபெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது. இதை உலகிற்கு தெளிவாக சொல்லி இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.