2026- க்கான சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை சனிக்கிழமை, அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்த நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார்.
அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் பிரசாரக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, எத்தனை வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை கூறினால் மட்டுமே அதற்கேற்றவாறு இடம் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்க இயலும் எனக்தெரிவிக்க கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினர் கேட்ட விபரங்களை நிர்வாகிகள் மூலம் அளிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படவில்லை.
தற்போது, அதற்கு பதிலாக நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் வரும் விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.