தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமானவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. இதனிடையே ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கனது குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.