சென்னை வடபழனி சாலையில் அமைந்துள்ள AVM தியேட்டர் கோலிவுட்டின் அடையாளமாக திகழ்கிறது.
இந்த தியேட்டர் 1970ம் ஆண்டு AVM ஸ்டுடியோ அருகிலேயே கட்டப்பட்டது.
சென்னையில் பல தியேட்டர்கள் வந்துவிட்டாலும் வடபழனி, சாலிகிராமம், கே.கே நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர் நகர் போன்ற பகுதியில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு வசதியாக AVM தியேட்டர் இருந்தது.
அதற்கு காரணம் இந்த தியேட்டரில் 50, 60, 100 இதுதான் அதிகபட்ச விலையாகும். மேலும், இங்கு விற்கப்படும் உணவு பண்டங்களும் மிக குறைவான விலையிலேயே விற்கப்பட்டு வந்தது. எனவே நடுத்தர மக்களுக்கு தேர்வாக AVM தியேட்டர் இருந்து வந்தது.
ஆனால், இங்கு புது படம் வெளியானால் மட்டுமே இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட்டமிருப்பதாகவும், அதன் பிறகு 20- லிருந்து 30 பேர் மட்டுமே படம் பார்க்க வருவதாகவும் சொல்லப்பட்டது.
கைக்காசு போட்டு இந்த AVM தியேட்டரை நடத்த முடியாது என்பதால் தியேட்டரை இடித்து விடலாம் என AVM நிர்வாகம் 3 வருடங்களுக்கு முன்பே முடிவெடுத்தது. ஆனால் அதற்கான வேலைகள் துவங்கவில்லை. தற்போது இந்த திரையரங்கை இடிக்கும் பணி துவங்கியிருக்கிறது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலருக்கும் பிடித்த ஏவிஎம் திரையரங்கம் இடிக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அண்மையில் உதயம் திரையரங்கம் தியேட்டர் அகற்றப்பட்டது. தற்போது, அந்த இடத்தில் ஒரு புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட உள்ளது.