2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,’உங்க விஜய் நான் வரேன், மக்கள் சந்திப்பு பிரசாரம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13ந்தேதி முதல் தொடங்கி உள்ளார். இந்த பிரசாரம் பெரும்பாலும், சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சி இருந்து தொடங்கியது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார். 2-கட்ட பிரசாரத்தை {செப் 20 } விஜய் நாகையில் நடத்தினர்.
3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்,
அதாவது, கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் குறித்த நேரத்தில் விஜயின் பிரசாரத்தை தொடங்க முடியாமல் காலதாமதத்துடன் நடைபெற்றது. இதனால் அவரை காண வரும் ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விஜயின் சுற்றுப்பயணம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20-ந்தேதி வரை மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படுகிறது.