கடந்த ஆகஸ்ட் மாதம் தேனியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நாதக நிர்வாகியான கல்யாணசுந்தரம், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை கடுமையாக பேசியுள்ளார். அதை ரசித்த சீமான், அந்த மேடையிலேயே அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தார்.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நாதக நிர்வாகிகள், கல்யாணசுந்தரத்தை மாற்ற வேண்டும் என தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொள்ளாத சீமான், கல்யாணசுந்தரம் தான் வேட்பாளர். நான் சொல்வதை கேட்டால் கேளுங்கள்… இல்லாவிட்டால் வெளியேறுங்கள் எனச் சொன்னதாகத் தெரிகிறது.
இதையடுத்து, நாதக தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில இணைச் செயலாளர் சுபாஷ், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சந்தித்து தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார். இவரை தொடர்ந்து நாதக வழக்கறிஞர் பாசறையின் மாநில இணைச் செயலாளர் பிரபாகர மூர்த்தி, குருதிக்கொடை பாசறை செயலாளர் ராமராஜ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் திமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
