அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையனின் கருத்துக்கு, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் திண்டுக்கல்லில் இன்று காலை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. K.A.செங்கோட்டையன், M.L.A., அவர்கள் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது. பொறுப்புகள் பறிக்கப்பட்ட நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.