அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய முடிவுகளை அறிவிக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பிரசார வாகனத்தில் ஊர்வலமாக கட்சி அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், 1972 ஆம் ஆண்டு அதிமுக கட்சி தொடங்கியபோதே கிளையை தொடங்கி பணியாற்றினேன் என்று கூறினார்.
தன்னை பொருளாளராக நியமித்து கோவை பொதுக்குழுவை நடத்தச் சொன்னவர் எம்ஜிஆர் என்றும், சிறப்பாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆர் பாராட்டி, சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வைத்ததையும் நினைவு கூர்ந்து பேசினார்.
உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமைமிக்க தலைவர்களாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் திகழ்ந்தனர் என்றும் புகழாரம் சூட்டினார். ஜெயலலிதாவின் மறைந்த பிறகு, பல்வேறு சோதனைகள் வரும்போது அனைவரும் சேர்ந்து இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்று சசிகலாவை பொதுச் செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தவர் வி.கே. சசிகலா என்றும் செங்கோட்டையன் கூறினார்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை சசிகலா நியமித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைக்க வேண்டும். தவறினால் தாங்களே ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் எனவும் கூறினார்.
அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பொதுச் செயலாளரின் பிரசாரத்தில் பங்கேற்பேன் என்று கூறிய செங்கோட்டையன், இணைக்காவிட்டால் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றார்.