முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான செங்கோட்டையன் மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது.
இதில் அதிமுக முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார். மேலும், பாஜக உடனான கூட்டணி விவகாரத்திலும், எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்கு செங்கோட்டையன் உடன்படாமல் இருந்து வந்தார்.
அதன்பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியில் இருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.
அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம், 5-ந் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார். மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா? என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.