2019 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியில் இடம் பிடித்து, முப்பரிமாண வீரராக (3D Player) வர்ணிக்கப்பட்டவர் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கத் தவறிய அவர், இப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான, அதே சமயம் சோகமான ஒரு முடிவை எடுத்துள்ளார். தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டை விட்டு விலகி, வரவிருக்கும் உள்ளூர் சீசனில், திரிபுரா அணிக்காக விளையாடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த திடீர் முடிவுக்குப் பின்னால், பல வருடங்களாக அவர் மனதில் பூட்டி வைத்திருந்த ஆதங்கமும், விரக்தியும் இப்போது வெடித்துச் சிதறியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வாளர்கள் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பிரபல பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், விஜய் சங்கர் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
“நான் நன்றாக விளையாடி வருகிறேன். ஆனால், தொடர்ந்து தேர்வாளர்களால் ஓரங்கட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டதால், நான் விரக்தியடைந்துள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார். “நான் வெளியே உட்கார்ந்து, வீரர்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது. பல வருடங்கள் விளையாடிய பிறகு, இது மிகவும் கடினம்,” என்று தனது வேதனையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் சங்கர், தேர்வாளர்கள் மீது வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு, அவருக்குப் போதுமான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கவில்லை என்பதுதான். “கடந்த வருடம், முதல் இரண்டு ரஞ்சி போட்டிகளில் என்னை நீக்கினார்கள். பின்னர் மீண்டும் அணியில் எடுத்தார்கள்.”
சையத் முஷ்டாக் அலி டிராபியில், கடைசி இரண்டு போட்டிகளில் என்னை நீக்கினார்கள். ஒரு கட்டத்தில், உங்களுக்கு ஒரு தெளிவு தேவை. ஆனால், எனக்கு அந்தத் தெளிவு கிடைக்கவே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ரஞ்சி சீசனில், சண்டிகருக்கு எதிராக தனது கெரியரின் சிறந்த ஸ்கோரான 150 நாட் அவுட் அடித்த பிறகும், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவர் வருந்துகிறார்.
கடந்த மூன்று வருடங்களில், 2022-ல் மட்டும்தான், நான் தொடர்ந்து 6-வது இடத்தில் பேட்டிங் செய்தேன். அப்போது, தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தேன். ஆனால், அதன்பிறகு, 3-வது இடத்திலிருந்து 7-வது இடம் வரை, எல்லா இடங்களிலும் என்னைப் பந்தாடினார்கள்,” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் சங்கர் இப்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்று, திரிபுரா அணியில், மற்றொரு இந்திய வீரரான ஹனுமா விஹாரியுடன் இணைந்துள்ளார்.
என்னை ஏன் ஓரங்கட்டினார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. ஆனால், இந்த அனுபவங்கள் எல்லாம், இன்று என்னை ஒரு சிறந்த, கடினமான கிரிக்கெட் வீரனாக மாற்றியுள்ளது,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜய் சங்கர்.