உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையை (Privacy) மேம்படுத்தும் வகையில் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள “Disappearing Messages” (தானாக அழியும் செய்திகள்) வசதியில், கூடுதல் நேர விருப்பங்கள் சேர்க்கப்பட உள்ளன. இது பயனர்களின் உரையாடல்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டைமர் விருப்பங்கள்:
WABetaInfo அறிக்கையின்படி, வாட்ஸ்அப் தனது “Disappearing Messages” அம்சத்தில் இரண்டு புதிய நேர வரம்புகளைச் சோதித்து வருகிறது. தற்போது 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் என்ற மூன்று விருப்பங்கள் மட்டுமே உள்ள நிலையில், இனிவரும் அப்டேட்களில் கூடுதலாக,
1 மணி நேரம்,12 மணி நேரம் ஆகிய இரண்டு புதிய விருப்பங்களும் சேர்க்கப்பட உள்ளன. இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்களுக்கான நன்மைகள்:
இந்த புதிய நேர விருப்பங்கள் பயனர்களுக்குப் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, வங்கி கணக்கு எண், கடவுச்சொற்கள் (Passwords) போன்ற மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிரும்போது, 1 மணி நேர டைமர் ஆப்ஷன் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். செய்தி அனுப்பப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அது தானாகவே அழிந்துவிடும் என்பதால், தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
இருப்பினும், இந்த அம்சத்தைப் பயன்படுத்தும்போது ஒரு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட செய்தியைப் பெறுநர் ஒரு மணி நேரத்திற்குள் பார்க்கவில்லை என்றால், அது அவர்கள் பார்ப்பதற்கு முன்பே அழிந்துவிடும்.
“About” பகுதிக்கும் புதிய டைமர் வசதி:
செய்திகளுக்கு மட்டுமல்லாமல், பயனர்களின் சுயவிவரத்தில் (Profile) உள்ள “About” பகுதிக்கும் இதேபோன்ற டைமர் வசதியைக் கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், உங்கள் சுயவிவரத்தில் நீங்கள் வைக்கும் ஸ்டேட்டஸ் செய்திகள், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு (உதாரணமாக, 1 மணி நேரம் முதல் 1 வாரம் வரை) தானாகவே அழியும்படி அமைத்துக் கொள்ளலாம். இது பயனர்களின் சுயவிவரத்தை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உதவும்.
சமீபத்தில் AI எழுத்து உதவியாளர், அழைப்புகளைத் திட்டமிடும் வசதி (Call Scheduling) போன்ற பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், தற்போது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த புதிய அப்டேட்கள் மூலம் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.