ஐபிஎல் கிரிக்கெட்டில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, வீரராக ஓய்வு பெற்ற அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும், பின்னர் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகுவதாக அந்த அணி உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுல் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வளர்ச்சிக்கு பெரிய தூண்டுதலாக இருந்துள்ளார். அவரது தலைமைப் பண்பு பல தலைமுறை வீரர்களுக்கு உத்வேகமளித்துள்ளது, அணியின் வலிமைக்கு காரணமாயிற்று. அத்துடன், அணியின் கலாச்சாரத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
அணி நிர்வாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக, ராகுலுக்கு அணியில் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், வீரர்களும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களும், அணிக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.