தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தணிக்கும் வகையில், கம்போடியா முன்னாள் பிரதமரும், செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் பேசினார். அப்போது, அவரை ‘அங்கிள்’ என அழைத்ததுடன், தாய்லாந்து ராணுவ தளபதியையும் விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த உரையாடல் பொதுவெளியில் கசிந்தது. இதையடுத்து கம்போடியா முன்னாள் பிரதமரிடம் ராணுவ தளபதியை விமர்சித்த பிரதமர் ஷினவத்ராவிற்கு எதிராக தாய்லாந்தில் போராட்டம் வெடித்தது. உடனடியாக தனது பதவியில் இருந்து ஷினவத்ரா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
அவருக்கு எதிராக அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.