விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்த நிலையில் இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது இருந்து தயாராகி வருகின்றன. திமுக கூட்டணி ஒருபக்கம், அதிமுக கூட்டணி ஒரு பக்கம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் மறுபக்கம் முனைப்பு காட்டி வருவதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக சூழல் நிலவி கொண்டிருக்கின்றன.
இதனிடையே பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி உடன் கூட்டணி என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி உடன் கூட்டணி அமைப்போம் என்பதை ஜனவரி 9 ஆம் தேதி தேமுதிக கூட்டணி அறிவிப்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் , தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 2026 தேர்தலில் விஜய் தேர்தலில் நிற்பது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.. இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு?
2006 தேர்தலில் தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டி போட்டார். யாருடனும் கூட்டணி இல்லை. ஆகவே விஜய் தற்போது வந்து தனித்து நிற்கும் போது அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? இந்தியர்களுக்கு தொழில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும். நம் நாட்டில் தற்போது ஜிஎஸ்டி போன்ற பல வரிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இது மேலும் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு உடனடியாக சரி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயம் மேற்கொள்கிறேன். தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். ஆனால் மக்கள் பிரச்சினையை தவிர்த்து விட்டு போகும் இடமெல்லாம் விஜய் குறித்தும், கூட்டணி குறித்தும் என்னிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேச மாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்தார்.