த.வெ.க. வின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ம் தேதி மதுரையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புகார் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் என்பவரால் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் பேசியபோது, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் த.வெ.க. மேலும் ஒரு புகாருக்கு ஆளாகியிருக்கிறது.
முன்னதாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் தவெக மாநாட்டின்போது விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் கூறியிருந்தார். மட்டுமல்லாமல் த.வெ.க. வுடன் கூட்டணிக்கு இணங்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் அறிவித்தார். அந்த மாநாட்டிலேயே விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
குறிப்பாக திமுகவை மன்னராட்சி என்று விமர்சித்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மதுரையில் தவெகவின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று குறிப்பிட்டார். திரும்ப திரும்ப ஸ்டாலின் ‘அங்கிள்’ என்று விஜய் குறிப்பிட்டார்.
இவ்வாறாக, ஸ்டாலினை ‘அங்கிள்’ என குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் விஜய்யின் பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக விஜய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மட்டுமல்லாமல் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது அவரது பவுன்சர்கள் தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.