முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா. எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமித்ஷா, தில்லியில் இருந்து எதையும் கொண்டு வரவில்லை. வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். திராவிட மாடல் அரசைக் குறை கூறுவதற்கு எதுவும் கிடைக்காமல், ஏற்கனவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பொய்களைப் பேசிச் சென்றிருக்கிறார்.
வரப்போகும் தேர்தலில் திமுக-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார் அமித்ஷா. இந்தியாவில் இருந்தே வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய நச்சு செடி பாசிச பாஜக. இந்தியா கூட்டணியும் மக்களும் அதனை நிகழ்த்திக் காட்டுவார்கள்.
மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. இதில் 19 அமைச்சர்கள் மீது மிகவும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம் 130-வது சட்டப் பிரிவு பாயுமா?
தங்களுக்குப் பிடிக்காதவர்களை ஆட்சியிலிருந்து விரட்டக் கொண்டு வந்த சட்டத்தை கறுப்பு சட்டம் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பார்களாம். இது நல்ல சட்டம் என்றால், ஏன் பாஜகவுக்கு மட்டும் பொருந்துவதில்லை.
130-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால் தனது ஏவல்துறையான அமலாக்கத்துறையை பயன்படுத்தி எப்படியெல்லாம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய பாஜக அரசு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என அவர் கூறியுள்ளார்.