தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் இன்று நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
மாநாட்டிற்கு வருகை தந்த விஜய், மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய், அங்குள்ள கம்பத்தில் தவெகவின் கொடியை ஏற்றினார். தொடர்ந்து மக்களாட்சி, மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியின் பெயரால் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மாநாட்டில் பேசிய விஜய் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சீண்டியுள்ளார். ”நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இவரெல்லாம் அரசியலுக்கு வர மாட்டார். அவரே வரவில்லை, இவர் எங்கே வரப்போகிறார் என்று நிறைய பேர் ஜோசியம் சொன்னார்கள். கட்சியின் பெயர் அறிவித்தவுடன் மக்களிடம் பெயர் வாங்க வேண்டுமே என்றனர். கூட்டமெல்லாம் எப்படி ஓட்டுகளாக மாறும்” என்று விமர்சனம் வைத்தார். மேலும் விஜய் தனது பேச்சின்போது சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்று குறிப்பிட்டார்.
சினிமாவில் ரஜினியை காப்பி அடித்த விஜய், இப்போது சினிமாவில் எனது தலைவர் எம்.ஜி.ஆர் என குறிப்பிட்டு இருப்பது ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.