Monday, August 11, 2025
HTML tutorial

ராகுல் காந்தி கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். 25 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த 300 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :-

சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.

ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News