கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் என்பவர் அதே பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்காக கியூ.ஆர். கோடு ஸ்கேனர் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த கடையில் வேணுகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த கியூ.ஆர் கோடை மாற்றிவிட்டு, அதில் தனது வங்கி கணக்கின் கியூ.ஆர் கோடை ஒட்டி வைத்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் வேணுகுமாரின் வங்கி கணக்கில் வந்துள்ளது.
ஹோட்டலில் வருவாய் குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த ஆஸ்டின், வங்கி கணக்குகளை சரிபறித்துள்ளார். அப்போதுதான் கியூ.ஆர் கோடு மூலம் செலுத்தப்படும் பணம் தனது வங்கி கணக்கில் வரவில்லை என்பதை கண்டுபிடித்தார்.
உடனே கடையில் வைக்கப்பட்டிருந்த கியூ.ஆர் கோடை ஓனர் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் வேணுகுமாரின் பெயர் காட்டியுள்ளது. அப்போதுதான் வேணு கடந்த 5 ஆண்டுகளாக மெகா பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஸ்டின் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேணுகுமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த மீனா என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசார் இருவர் மீது வழக்குப்பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.