தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரிக்கையை பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,787 டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்கள் 1ஆம் தேதி சம்பளம் பெற்று வருகின்றனர். அவர்கள் சம்பளத்தை முழுமையாக வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.