இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உயர் தரமான மருத்துவ சேவைகளை நேரில் சென்று வழங்கும் நோக்கில், “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற சிறப்பு மருத்துவ முகாம்களை இன்று தொடங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட அரங்கை பார்வையிட்டு, முகாம்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 256 முகாம்களில் பொதுமக்களுக்கு இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படும். பொதுமருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.