தெருமுனை பெட்டிக்கடை என்றால் கூட டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் என்பதே நம்மில் பலருக்கு தற்போது பழகிவிட்டது. நாடு முழுவதும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை என்பது வசதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் கடந்த மே மாதத்தில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை 25 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கூகுள் Pay, ஃபோன் Pay உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, கடந்த 2 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார். அதாவது இந்தியாவில் ஒரு நாளுக்கு சராசரியாக, 60 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கான நிதிச்செலவு மிகவும் அதிகம் என்று கூறிய சஞ்சய் மல்ஹோத்ரா, அதனை தற்போது மத்திய அரசு ஏற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் நீண்ட நாட்களுக்கு அதனை அரசாங்கம் மட்டுமே செய்ய முடியாது என்று கூறிய RBI ஆளுநர், யுபிஐ பரிவர்த்தனைக்கான செலவை வணிகர்களிடமோ, பொதுமக்களிடமோ வசூலிக்கும் சூழல் ஏற்படலாம் என கூறியிருக்கிறார். இதனால் விரைவில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் 2000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதற்கு ஜிஎஸ்டி விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தற்போது வரை அப்படியான எந்தப் பரிந்துரையும் கவுன்சிலுக்கு வரவில்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.