வடகிழக்கு பருவமழைக்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். வெள்ள அபாயம் இருக்கும் பகுதிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.