திருமங்கலம் பகுதியில் ஆடைக்குள் மறைத்து சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருமங்கலம் பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வரும் ஜூலியட்மேரி என்பவர் கடந்த மே மாதம் 30ஆம் தேதி பொருட்களை சரிபார்த்தபோது ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக திருமங்கலம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்த போலீசார் இளைஞர் ஒருவர் மளிகை பொருட்கள் வாங்குவதுபோல நடித்து பல நாட்களாக தனது ஆடைக்குள் மறைத்து பொருட்களை திருடிச் சென்றதை கண்டுபிடித்தனர்.
குறிப்பாக நெய், பாதாம், முந்திரி, பிஸ்தா, காபி தூள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை அவர் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணைக்குப் பின்னர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்தூரைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.