தற்போது இருக்கும் நவீன உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மக்கள் பெருமளவு பயன்படுத்துகின்றார்கள்.. ஆனால் இன்னும் சிலர்
நாணயங்களை விட அன்றாட பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதையே விரும்புவதால், 50 ரூபாய் நாணயத்தை சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியது.. இது குறித்து RBI விளக்கமளித்துள்ளது.. இதனை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
அதாவது, பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளையே விரும்புவதால், 50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கண் பார்வையற்றவர்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில், குறிப்பாக 50 ரூபாய் மற்றும் அதற்குக் குறைவான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அச்சிட வேண்டும் என்று கோரி PIL எனப்படும் பொதுநல மனுவுக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் ரோஹித் தண்டிரியால், ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு காரணமாக கண் பார்வையற்ற குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை குறித்து ஒரு ஆய்வு நடத்தியதாகக் கூறினார்.
தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி அனிஷ் தயால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கியின் நாணயப் பிரிவின் துணைச் செயலாளர் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.
50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ரிசர்வ் வங்கி 2022இல் ஒரு ஆய்வை நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் நாணயங்களை விட 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பது கண்டறியப்பட்டதாகவும் RBI பதில் அளித்துள்ளது.
“அதாவது, RBI 2022ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டு முறைகளை பகுப்பாய்வு செய்ய ஒரு ஆய்வை நடத்தியது. நாணயங்களைவிட 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளுக்கே மக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது” என பிராமணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கண் பார்வையற்றவர்களின் வசதியை உறுதிப்படுத்த, மத்திய அரசு மார்ச் 2019 இல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் மதிப்பிலான நாணயங்களின் புதிய தொடரை அறிமுகப்படுத்தியது.
இவைகள் கண் பார்வையற்றவர்களால் எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று RBI குறிப்பிட்டுள்ளது.
மேலும்“50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான எந்தவொரு முடிவும், பொருளாதாரத் தேவை மற்றும் பொதுமக்கள் ஏற்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. தற்போது, 50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை” எனவும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக, கண் பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுகளை சரியாக அடையாளம் காண உதவும் வகையில் 2020ஆம் ஆண்டிலேயே மொபைல் எய்டட் நோட் ஐடென்டிஃபையர் (Mobile Aided Note Identifier) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.