Wednesday, July 16, 2025

கடலூர் பள்ளி வேன் விபத்து : தவெக தலைவர் விஜய் இரங்கல்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news