இந்திய ரயில்வே நாடு முழுவதும் பயணிகளுக்கு முக்கிய சேவை அளிக்கும் ஒரு பெரும் அமைப்பாகும். தினமும் 2.5 கோடி பயணிகள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கிறார்கள். பெரும்பாலான நீண்ட தூர ரயில்களில் பயணிகளுக்கு உணவு வசதி வழங்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ரயில்களில், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளது. அதுதான் “சச்கண்ட் எக்ஸ்பிரஸ்” ரயில். சச்கண்ட் எக்ஸ்பிரஸ் என்பது அமிர்தசரஸ் மற்றும் நாந்தேத் இடையே இயக்கப்படும் ஒரு ரயில் ஆகும்.
33 மணி நேரம் பயணம் செய்யும் இந்த ரயில் மொத்தம் 39 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில் பயணம் இரண்டு புனித தலங்களை இணைப்பதால், இந்த ரயில் சீக்கியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதில் பயணிக்கும் பயணிகளுக்குக் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் உணவு கடந்த 29 ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.