Friday, July 4, 2025

”இங்க அடிச்சா அங்க வலிக்கும்” இந்தியாவுக்கு 500% வரிவிதிப்பு?

இந்தியா மீது 500 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்காவின் செனட் மசோதாவுக்கு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்திருக்கிறார். இது இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக, அண்மையில் தெரிவித்த டிரம்ப் திடீரென இப்படி இந்தியாவிற்கு எதிராக திரும்ப காரணம் என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, இந்தியா அதிகளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு இந்தியா- ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய ஆரம்பித்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கும் 2வது பெரிய நாடு இந்தியா தான். இதேபோல சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து, அதிகளவு எண்ணெயை இறக்குமதி செய்வதால் தான் ரஷ்யா – உக்ரைனுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துகிறது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுகிறார். குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூட இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் போது, ​​” இந்தியா, சீனா இரு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெயில் 70% வாங்குகின்றன. இவர்களே புதினின் போர்ச்சக்கரத்தை சுழற்றுகின்றனர்,”  என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது. எனவே இந்தியா – சீனா நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதித்தால் இரு நாடுகளும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிரான போரினை அந்நாடு நிறுத்தும் என்பது அமெரிக்காவின் எண்ணமாக உள்ளது. இதனால் தான் இந்தியா – சீனா நாடுகளுடன் ஒருபக்கம் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் டிரம்ப், மறுபக்கம் இரு நாடுகளின் பொருளாதாரத்தை அடியோடு பாதிக்கும் என்று தெரிந்தும், 500 சதவீத வரிவிதிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதா மூலம் உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து புதினை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர, ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த மசோதா குறித்து, ”இந்தியாவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் இந்த மசோதா குறித்து எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு, 500% வரி விதிக்கும் மசோதாவை ஆதரித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த மசோதாவில் எங்கள் கவலைகள் மற்றும் அக்கறைகள் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று கவலை தெரிவித்து இருக்கிறார். உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் சீனா, ரஷ்யா, இந்தியா என்று 3 பெரிய நாடுகளை ஒரே நேரத்தில் அமெரிக்கா எதிர்த்து நிற்கிறது.

அமெரிக்காவின் இந்த அடாவடி வரிவிதிப்பு மசோதாவுக்கு ரஷ்யா, சீனா, இந்தியா நாடுகளின் பதிலடி என்னவாக இருக்கும்? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news