2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகமான பில்லியனர்களைக் கொண்ட நாடுகள் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகளவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது, அவர்களது மொத்த சொத்து $16.1 டிரில்லியன் ஆகும். இதில் அமெரிக்கா, சீனா, இந்தியா என்ற மூன்று நாடுகள் உலகிலுள்ள பில்லியனர்களின் பாதியை மற்றும் அவர்களது சொத்துகளின் பெரும்பகுதியையும் கொண்டுள்ளன.
இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 902 பில்லியனர்கள் உள்ளனர், இது கடந்த ஆண்டை விட 89 பேர் அதிகம். அவர்களது மொத்த சொத்து $6.8 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய செண்டிபில்லியனர்களில் பெரும்பான்மை ஆனவர்கள் அமெரிக்கர்கள் தான். எலன் மஸ்க் $342 பில்லியன் சொத்துடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார்.
சீனா 450 பில்லியனர்கள் மற்றும் $1.7 டிரில்லியன் சொத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், பங்கு சந்தை வீழ்ச்சியால் சொத்துக்கள் சுமார் $400 பில்லியன் குறைந்துள்ளன. சீனாவின் மிகப்பெரிய பணக்காரரான, ByteDance நிறுவனத்தின் இணை நிறுவனர், ஜாங் யிமிங், $65.5 பில்லியன் சொத்துடன் முன்னிலை வகிக்கிறார்.
இந்தியா 205 பில்லியனர்கள் மற்றும் $941 பில்லியன் சொத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட சொத்துக்கள் சிறிது குறைந்துள்ளன, இதற்கு காரணம் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி போன்ற முன்னணி தொழிலதிபர்களின் சொத்துக்கள், பங்கு சந்தை வீழ்ச்சியால் குறைந்ததுதான்.
ஜெர்மனி 171 பில்லியனர்கள் மற்றும் $793 பில்லியன் சொத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. சூப்பர் மார்க்கெட் மன்னன் டைட்டர் ஸ்வார்ஸ் (Dieter Schwarz) $41 பில்லியன் சொத்துடன் ஜெர்மனியின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார்.
மேலும், அல்பேனியா தனது முதல் பில்லியனரை பெற்றுள்ளது. சமீர் மானே என்பவர் (Samir Mane) $1.4 பில்லியன் சொத்துடன் அல்பேனியாவின் முதல் பில்லியனராக உருவெடுத்திருக்கிறார். பெரு மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளும் பில்லியனர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி காண்கின்றன.
இந்த பட்டியல் உலகின் பணக்காரர்களின் பரவலையும், பொருளாதார வளர்ச்சியின் மையங்களையும் தெளிவாக காட்டுகிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா மூன்று நாடுகளும் உலக பில்லியனர்களின் பாதியை கொண்டிருப்பதால், உலக பொருளாதாரத்தில் இவர்களின் தாக்கம் மிகுந்தது என்று சொல்லலாம்.