தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் நகர் மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி உள்ளார். துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் (எ) ராஜு என்பவர் உள்ளார்.
கடந்த பல மாதங்களாக சங்கரன்கோவில் நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என கூறி பொதுமக்கள் மத்தியில் சங்கரன்கோவில் நகராட்சி மீதும், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி மீதும், அதிருப்தி நிலவி வந்தது. அதுமட்டுமின்றி அதிமுக மட்டுமில்லாது திமுக உறுப்பினர்களுக்கும் நகர்மன்ற தலைவிக்கும் இடையே பனிப்போரும் நிலவி வந்தது.
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை, டெண்டர் முறைகேட்டில் ஈடுபடுவது, அதிகப்படியான கமிஷன் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து சங்கரன்கோவில் நகராட்சி கூட்டங்களில் உறுப்பினர்கள் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுவதும், வெளிநடப்பு செய்வதும் வாடிக்கையாக இருந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக, அவரை பதவி நீக்கம் செய்யம் வகையில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், SDPI, சுயேட்சைகள் உள்ளிட்ட சுமார் 26 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆனையாளரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்க்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் 29 நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்த நம்பிக்கை இல்லா தீர்மான ஓட்டெடுப்பில் 28 ஆதரவு ஓட்டுகள் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த நகர் மன்ற தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
திமுக நகர் மன்ற தலைவிக்கு எதிராக 2வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்று, நகர் மன்ற தலைவி உமாமகேஸ்வரி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு சங்கரன்கோவில் நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.