Tuesday, July 1, 2025

வீட்டின் முன் குப்பை கொட்டிய மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பெண்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஹுச்சம்மா (76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார். இதைப்பார்த்த மூதாட்டி ஹுச்சம்மா அவரிடம் ஏன் எனது வீட்டின் முன்பு குப்பை கொட்டினாய் என்று கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தை சேர்ந்த மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் வந்து மூதாட்டியிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஆத்திரம் அடைந்த பிரேமா, மூதாட்டி ஹுச்சம்மாவை அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்து தாக்கினார்.

இந்த சம்பவத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் செயல்பட்டனர். மூதாட்டியை பிரேமா மரத்தில் கட்டி வைத்து தாக்கியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மூதாட்டியை மீட்டனர்.

பின்னர் இது குறித்து தாக்கப்பட்ட ஹுச்சம்மாவின் மகன் கண்ணப்பா என்பவர் ஆனந்த்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிரேமா, மஞ்சுநாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news