Sunday, July 6, 2025

“ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தால் விவசாயி ஆகி விட முடியுமா?” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “பூனை கண்ணை மூடி கொண்டால் பூலோகம் இருண்டு விடும் என்று சொல்வார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமிக்கு எதைப் பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் ஒருமுறை பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார்.

கீழடி நாகரிகத்தை உலகத்திற்கு வெளி கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அவர் இல்லையென்றால் கீழடி நாகரிகம் வெளி உலகத்திற்கு தெரியாமல் போயிருக்கும். எனவே கீழடி நாகரிகம் பற்றி திமுக அரசை யார் குறை கூறினாலும் அதனை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி கிடையாது. அவர் எந்த நிலத்தில் இறங்கி விவசாயம் பார்த்தார். தோளில் கலப்பையை போட்டுக்கொண்டு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தால் விவசாயி ஆகி விட முடியுமா. எனவே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் போலி விவசாய என விமர்சிப்பது தவறு இல்லை.

பழனியில் அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் முருக பக்த மாநாடை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். ஆனால் தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிக் கொண்டிருந்த பாஜகவினர் அது எடுபடவில்லை என்றவுடன் தமிழ் கடவுள் முருகர் பெயரில் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். இருப்பினும் தமிழக மக்கள் மத்தியில் அது எடுபடாது.

கிரிமினல் குற்றவாளிகளை இந்தியாவிலேயே அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக தான். இதனை நான் ஏற்கனவே புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டுள்ளேன். கிரிமினல் குற்றவாளி என்று தெரிந்தால் சேர்க்கும் கட்சி பாஜக. கிரிமினல் குற்றவாளி என்று தெரிந்த உடனே அவர்களை பொறுப்பிலிருந்து இருந்து தூக்கும் கட்சி திமுக” என்று தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news