Wednesday, July 30, 2025

14 வருஷத்துல ‘பர்ஸ்ட்’ சம்பவம் ‘தலை’ சுற்ற வைக்கும் ‘விமானத்தின்’ விலை & வசதிகள்..

ஜூன் 12ம் தேதி மதியம் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற, ஏர் இந்தியா போயிங் 787-8 ரக ட்ரீம்லைனர் விமானம் சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கி உருக்குலைந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த இந்த விபத்தில் 241 பேர் பலியாகினர்.

அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. தற்போது விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் விபத்தில் சிக்கிய போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் விலை, அதில் உள்ள வசதிகள் மற்றும் அதன் வரலாறு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம். பொதுவாக போயிங் ரக விமானத்தில் பல ரகங்கள் இருக்கின்றன.

விபத்தில் சிக்கிய இந்த விமானம் Mid Size எனப்படும் நடுத்தர வகையை சேர்ந்தது. இதன் மொத்த எடையில் பாதி எரிபொருள் தான். இதனால் ஒருமுறை எரிபொருள் நிரப்பப்பட்டால், எங்கும் நிற்காமல் 13,530 கிலோ மீட்டர் தூரம் வரை, இந்த விமானத்தால் பயணிக்க முடியும்.

விமானத்தின் மொத்த எடை 227 டன். இந்த ரக விமானம் இரண்டு எஞ்சின் கொண்டது. எந்த விமானத்திலும் இல்லாதவாறு இந்த விமானத்தின் ஜன்னல்கள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் இருக்கும். உள்ளே இருக்கக்கூடிய பயணிகளுக்கு விரிவான காட்சிகளை வழங்கக்கூடிய வகையில், பெரிய ஜன்னல்கள் இடம்பெற்றிருக்கும்.

எனினும், வெளிச்சத்தில் கண்கள் கூசாமல் இருக்க எலக்ட்ரானிக் டிம்மிங் வசதி ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. இப்படி பயணிகளின் சொகுசுக்காகப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பிசினஸ் கிளாஸில் 18 இருக்கைகள் எக்கனாமி கிளாஸில் 230 இருக்கைகள் என்று மொத்தம் 248 இருக்கைகள் இருந்துள்ளன.

பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகள் நிறைந்த விமானம் என்பதால், இந்த ரகத்தில் மட்டும் 27க்கும் அதிகமான விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வைத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இந்த போயிங் ரக விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. ஏர் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களும், இந்த போயிங் 787-8 ரக விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

கடந்த 2012ம் ஆண்டு இந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி ரூபாயாகும். விபத்தில் சிக்கிய இந்த விமானம் பயன்பாட்டுக்கு வந்து 13 ஆண்டுகள் தான் ஆகின்றன. பயன்பாட்டுக்கு வந்த 14 வருடங்களில், இந்த ரக விமானம் விபத்தில் சிக்குவது இதுவே முதன்முறையாகும். பொதுவாக ஒரு விமானம் 20 ஆண்டுகள் ஆனால், பயணிக்க தகுதி இல்லாத விமானமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News