குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, இன்று மதியம் 1.38 மணிக்கு 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என்று, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தநிலையில் விமானம் புறப்பட்ட உடனேயே விமானி MayDay MayDay MayDay என்று 3 முறை அவசர சிக்னல் கொடுத்த விவரம், தற்போது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டபோது, பதிலுக்கு விமானத்தில் இருந்து சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை.
விமான போக்குவரத்து மற்றும், கடல்சார் தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும், மிக உயர்ந்த அளவிலான ரேடியோ துயர சமிக்ஞை MayDay என்று அழைக்கப்படுகிறது. விமானம் தீப்பிடித்தல், இயந்திர செயலிழப்பு, கட்டுப்பாட்டை இழப்பது போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் விமான குழுவினர் இந்த அழைப்பை மேற்கொள்கின்றனர். இதற்கு Help Me அதாவது நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அர்த்தம்.
இவ்வாறு விமானியிடம் இருந்து அவசர அழைப்பு வந்தால், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிறுவனமான ATC மற்ற அனைத்து அழைப்புகளையும் துண்டித்து விட்டு, MayDay அழைப்புக்கு முன்னுரிமை அளிக்கும். அப்போது விமானம் அல்லது கப்பலில் உள்ளவர்கள் தங்களின் நிலை, பயணிகளின் எண்ணிக்கை, தேவைப்படும் உதவி ஆகியவற்றை தெரிவிப்பர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள அவசரகால அதிர்வெண்கள், அதாவது Frequency ATC யால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த MayDay அழைப்பினால் மீட்பு குழுக்கள் விரைந்து செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.