Saturday, July 5, 2025

இஸ்ரேலின் ஹிட் லிஸ்ட்டுக்குள் வந்த ஈரான்! தயாராகும் அணு ஆயுதங்கள்? அமெரிக்க உளவுத்துறையின் திக் திக் தகவல்!

மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் உச்சம் அடைந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தலைதூக்கி வருவதால் அமெரிக்கா ஹை அலர்ட் மோடில் இருப்பதாகத் தெரிய வருகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை எதிர்ப்பார்த்தபடி செல்லவில்லை. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு நெருடலான ஒன்று. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஈரான் இதற்கு பிடி கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தையும் சுமுகமாகப் போகவில்லை. இதனால் மீண்டும் ஒரு மோதல் நடக்கும் என்ற பதற்றம் உச்சம் அடைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கும், ஈரான் நாட்டிற்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், இஸ்ரேல் அடுத்த நொடியே ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகக் ஒரு சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியது. தற்போது அணுசக்தி பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் ஏமாற்றத்தில் உள்ளார். இதனையடுத்து டிரம்ப் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் கூட, டிரம்ப் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை நிறுத்த ஒப்புக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகக் கூறியிருந்தார். அது என்ன யுரேனியும் செறிவூட்டல் என்று கேட்கிறீர்களா? செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் அணு ஆயுத தயாரிப்பில் முக்கியமானதாக இருக்கிறது. இதனை கைவிடாத பட்சத்தில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதையே காட்டுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் தான் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி நடந்தால் ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவை தாக்கலாம். இப்படியொரு பதற்றத்துக்கு நடுவில் இஸ்ரேலின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news