Saturday, July 5, 2025

உலகிலேயே வேகமான EV கார்! அலற விட்ட சீன நிறுவனம்! SPEED ‘RANGE’ அல்டிமேட் !

உலகின் புகழ்பெற்ற பந்தய பாதை ஜெர்மனியின் நியூர்பர்க் (Nürburgring Nordschleife) சுற்றுப் பாதையில், சியோமி நிறுவனம் தயாரித்த SU7 Ultra மின்சார கார் புதிய சாதனை படைத்திருக்கிறது.

இந்த கார், அந்த பாதையை 7 நிமிடம் 4.957 விநாடிகளில் முடித்துள்ளது. இதன் மூலம், இது உலகின் மிக வேகமான உற்பத்தி செய்யப்பட்ட மின்சார கார் எனும் புதிய பட்டத்தை பெற்றுள்ளது.

இது வரை அந்த சாதனையை வைத்திருந்தது போர்ஷ் டைக்கன் டர்போ ஜிடி வைஸாக் பேக்கேஜ் (Porsche Taycan Turbo GT Weissach Package) என்ற ஜெர்மனிக் கார். ஆனால், சியோமி SU7 Ultra, அதைவிட 2.5 விநாடிகள் சீக்கிரமாக முடித்திருக்கிறது.

இதே நேரத்தில், ரிமாக் நெவரா டைம் அட்டாக் (Rimac Nevera Time Attack) என்ற \$3 மில்லியன் மதிப்புள்ள சூப்பர் காரையும் 0.3 விநாடிகள் வித்தியாசத்தில் முந்தியுள்ளது.

SU7 Ultra வில், மூன்று மின் மோட்டார்கள் உள்ளன.  மேலும் 1.98 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 62 மைல்கள் வரை வேகத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் 217 ஆகும்.

இந்த சாதனை முதல் முயற்சியிலேயே நிகழ்ந்தது என சியோமி தெரிவித்துள்ளது. மேலும், இந்த சாதனையை உறுதி செய்யும் வகையில் முழு வீடியோவையும் அவர்கள் தங்களது YouTube சேனலில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கேற்ப, இவ்வளவு திறன் வாய்ந்த காரின் ஆரம்ப விலை 529,900 யுவான், அதாவது சுமார் 74,000 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் இது சுமார் ₹62 லட்சம்.

இது சியோமியின் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புதுமுகக் கம்பெனியாக இருந்தும், இவ்வளவு திறமையான காரை உருவாக்கியிருக்கிறார்கள். சீன கார்கள் பற்றிய நம்முடைய சந்தேகங்கள் இருக்கலாம் – ஆனால் வேகத்தில் மட்டும் பார்த்தால், சியோமி SU7 Ultra, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news