Sunday, July 27, 2025

பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது – நயினார் நாகேந்திரன் பேட்டி

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது : “ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு சிறுமி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தங்கள் பிள்ளையை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ள கொலையாளி குடிபோதையில் இருந்தான் என வெளியாகியுள்ள தகவல், போதைப் பொருட்களின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்து கிடப்பதையும், பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளது என்பதையும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்துகிறது. இதுதான் திமுக-வின் விடியல் ஆட்சியா?

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தானே குற்றங்கள் குறையும்? சட்டம் ஒழுங்கு செம்மையாக இருந்தால் தானே குற்றவாளிகளுக்கு பயமிருக்கும்?

இதுபோன்ற சம்பவங்களைக் காணும் ஒவ்வொரு குடும்பமும், “நாளை நம் குடும்பப் பெண்களுக்கும் இதே நிலைமைதானோ” என்ற பயத்தில் தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News