தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர நியாயவிலைக் கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மலிவு விலையில் அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருவதன் மூலம் 2 கோடி குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுகின்றனர்.
இந்நிலையில் நியாய விலை கடைகளில் வாங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை என்ற குற்றச்சாட்டு குடும்ப அட்டைதாரர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்தனர். குறிப்பாக, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் சர்க்கரை கிலோ கணக்கில் குறைந்த எடையுடன் தரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் ரேஷன் பொருட்களை பாக்கெட் போட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது.
ஆனால் பாக்கெட் செய்யப்பட்டால் சரக்கு மற்றும் சேவை வரி சேர்ந்துவிடும் என்பதால் தமிழக அரசு அந்த திட்டத்தை கைவிட்டது. ஆனாலும் இதற்கு தீர்வு காணும் வகையில் அண்மையில் ஒரு புதிய நடைமுறை அமல்படுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் POS என்னும் மின்னணு கருவி மூலம் பொருட்கள் வழங்கப்பட்டதற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்னணு இயந்திரத்தில் ரேஷன் அட்டை உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் POS கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த கருவியுடன் மின்னணு தராசும் இணைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் சில ரேஷன் கடைகளில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊழியர் தராசில் வைக்கும் பொருளின் எடை தான், அந்த கருவியில் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.