அமெரிக்கா சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருவது தற்போது இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் அடிக்கடி தலையிடும் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக்கிற்கு இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததுதான் அதற்குச் சிறந்த உதாரணம். “நீங்கள் இந்தியாவில் பல பில்லியன் டாலர் முதலீடு செய்கிறீர்கள், இந்தியா அதிக வரி விதிக்கும் நாடு, அங்கு கட்டிடம் கட்ட விரும்பினால் கட்டுங்கள்… ஆனா அது எனக்கு பிடிக்கவில்லை… நீங்கள் அமெரிக்க நிறுவனமா இருந்தா, அமெரிக்காவையே பாருங்கள்…” என டிரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை ஏற்பட்ட போது, “போரையும் நிறுத்தினேன், வர்த்தகத்தை பரிசாகக் கொடுத்தேன்” என ட்ரம்ப் கூறியதும், இந்திய வெளியுறவுத்துறை மறுத்திருந்த போதும், மீண்டும் அவர் அதே கருத்தை மீட்டெடுத்ததும், டெல்லியில் உள்ள அதிகாரிகளை சிந்திக்க வைத்திருக்கிறது. இந்தியா-அமெரிக்க உறவுகள் உறுதியற்றவை என்றே சிலர் கருதத் தொடங்கியுள்ளனர்.
இதே வேளையில், ரஷ்யாவோ, இந்தியாவுடன் தனது நட்பை உறுதியாக நிலைநாட்டி வருகிறது. முக்கியமாக பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை உருவாக்க இரு நாடுகளும் ஒன்றாக களமிறங்கியுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது இந்த ஏவுகணை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னணியில் தற்போது ரஷ்யாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், 800 கி.மீ வரம்பு கொண்ட, எடை குறைந்த, விமானங்களில் ஏவக்கூடிய ‘பிரம்மோஸ் லைட்’ ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா இறங்கியுள்ளது.
இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு புதிய உயரங்களை தரும். அதேசமயம், அமெரிக்காவிடம் இருந்து வரும் எச்சரிக்கைகள், இந்தியா தனது உள்நாட்டு முடிவுகளை தானாக எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதையும் சிந்திக்கச் செய்கிறது.
இந்த நிலையில், ட்ரம்ப்பை நம்பலாமா? அமெரிக்கா உண்மையான நண்பனா? என்ற கேள்விகள் டெல்லியில் பதிலுக்காக காத்திருக்கின்றன.