UPI எனப்படும் Unified Payments Interface மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மத்திய அரசு தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளது. கிரெடிட் கார்டுகளை விட UPI பரிவர்த்தனைகளை குறைந்த விலையிலும்,பயனுள்ளதாகவும் மாற்றும் திட்டத்தில் மத்திய நுகர்வோர் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
அதாவது டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிப்பதும், வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள் நேரடியாக வழங்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 2 முதல் 3 சதவீதம் வரை MDR எனப்படும் [Merchant Discount Rate ] வணிகர் தள்ளுபடி விகிதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடைக்காரர் முழு கட்டணத்தையும் பெற முடியாது. அதே நேரத்தில், UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. பல நேரங்களில் கடைக்காரர்கள் இந்த செலவை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கிறார்கள்.
இந்த பிரச்சினையை சரிசெய்ய வாடிக்கையாளர் UPI மூலம் பணம் செலுத்தினால், பொருட்களின் விலையில் நேரடி தள்ளுபடி பெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.
இந்த திட்டத்தை நடத்துவதற்கு முன்பே வருகிற ஜூன் மாதம் மின்னணு வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், கட்டண சேவை வழங்குநர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் பிறகே இந்த திட்டத்தின் இறுதி வரைவு தயாரிக்கப்படும். எனினும், இந்திய கட்டண கவுன்சில் UPI மற்றும் RuPay debit கார்டுகளில் MDR கட்டணத்தைச் செயல்படுத்தக் கோரியுள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் இதனை அங்கீகரிக்கவில்லை.
NPCI புதிய விதியின்படி, 2025 ஜூன் 16ஆம் தேதி முதல், UPI கட்டணம் 15 வினாடிகளில் முடிக்கப்படும். இதற்கு முன்பு 30 வினாடிகள் வரை எடுத்தது. இது டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை சிறப்பாக மாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. UPI பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரையில், 2024-25 நிதியாண்டில், UPI மூலம் 185.85 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகம் ஆகும். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 260.56 லட்சம் கோடியாகும். இது 30 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது.
இது மட்டுமின்றி , NPCI,UPI பாதுகாப்பிற்காக ஒரு புதிய விதியை உருவாக்கிருக்கிறது. இனிமேல் தவறான நபர்களுக்கு பணம் அனுப்பப்படாது. இதற்கான உத்தரவு ஜூன் 30க்குள் முழுமையாக செயல்படுத்தப்படும். இது Google Pay, Phone Pay, Paytm பயன்படுத்து பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.