பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுலபமாக கிடைக்க வேண்டும் – இதை நோக்கமாகக் கொண்டு, சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக, 50 முக்கிய இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளன. கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ள பகுதிகள் உள்ளிட்ட மக்கள் மிகுந்த இடங்களில் இந்த ஏடிஎம்கள் நிறுவப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களுடைய பாட்டில்களில் நேரடியாக சுத்தமான குடிநீரை எடுத்து பருகும் வகையில் இந்த மெஷின்கள் செயல்படும். இது முற்றிலும் தானியங்கி முறையில், ஒரு எளிய டச் மூலம் இயங்கும்.
இதுவரை சென்னையில் குடிநீர் லாரிகள் மற்றும் குழாய்கள் வழியாக விநியோகிக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், பரபரப்பான இடங்களில் தரமான குடிநீர் கிடைக்காதது ஒரு பெரிய சிக்கலாகவே இருந்து வந்தது.
இப்போது அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், பட்டினப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், அண்ணா நகர் டவர் பூங்கா, பாண்டி பஜார் உள்ளிட்ட 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் முதல் கட்டமாக நிறுவப்படுகின்றன.
இது சுகாதாரத்தின் அடிப்படையான அம்சமான குடிநீரை, நேரடியாக பொதுமக்களுக்கு எளிதாகப் பெற்றுத் தரும் ஒரு முன்னோடியான திட்டமாக பார்க்கப்படுகிறது.