Wednesday, May 14, 2025

இந்தியா-பாகிஸ்தான்! சிரித்தபடி பரபரப்பை கிளப்பிய டிரம்ப் ! எதுக்கு இதெல்லாம்?

சவூதி அரேபியாவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றிய போது, இந்தியா – பாகிஸ்தான் தொடர்பான அவரது பரபரப்பான கருத்துகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

“இந்தியா – பாகிஸ்தான் போருக்கு முன் வந்திருந்த நிலைமை… மிக மோசமாக இருந்தது. அணுஆயுதங்கள் என்றெல்லாம்  பேசப்பட்டது. மில்லியன் கணக்கான உயிர்கள் பறிபோகும் அபாயம் இருந்தது. ஆனால், அதை நாங்கள் தடுத்தோம். என் நிர்வாகம் இதை சாமர்த்தியமாகக் கையாண்டது,” என்று ஆரம்பித்தார் டிரம்ப்.

அதிலும் முக்கியமாக, தாமாகவே தம்பட்டம் அடித்து, “இந்த இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை நிறுத்தியது நாங்கள்தான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வர்த்தகம் செய்வோம், அழகான பொருட்களை உருவாக்குவோம் என்று கூறி, போருக்கு பதில் அமைதியை ஏற்படுத்தச் செய்தோம்,” என்றார்.

மேலும், “இந்தியா – பாகிஸ்தான் தலைவர்கள் வலிமையானவர்கள், புத்திசாலிகள், நல்லவர்கள்… அவர்கள் ஒருவருக்கொருவர் மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். உண்மையில், இப்போது நல்ல முறையில் பழகுகிறார்கள் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.

பின்னர் சிரித்தபடியே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் பார்த்து, “நாம் இன்னும் அவர்களை நெருக்கமாகக் கொண்டுவந்தால், ஒருநாள் இருவரும் ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிடும் நிலைக்கும் வருவார்கள். அப்படி நடந்தால் சூப்பரா இருக்குமே?” என்று பேசியதும், பலரது கவனத்தை பெற்றது.

இந்த உரையினால், ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் சிந்தனையும் எழுந்திருக்கிறது. உண்மையில், இந்தியா –பாகிஸ்தான் அமைதி என்பது உலகத்துக்கு  தேவையான ஒன்று தான்.

Latest news