இந்தியாவில் பாதுகாப்பையும், பொதுமக்களின் சவுகரியத்தையும் மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இப்போது, விமான நிலையங்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன் என்பது பெரும்பாலான பயணிகளுக்கும் ஒரு பெரிய டென்ஷனாகவே இருக்கிறது அல்லவா?
அதனால்தான், இப்போது மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கையாக இ-பாஸ்போர்ட்என்ற புதிய வகை பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயண அனுபவத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தவும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
2024 ஏப்ரல் 1ம் தேதி முதல் பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 எனும் புதிய வெர்ஷனின் கீழ், முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் இ பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது — நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், ராஞ்சி மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் இ பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 22க்குள் 729 பேருக்குப் புதிதாக இ பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த இ-பாஸ்போர்ட்டில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இதில் RFID சிப், அதாவது ரேடியோ அதிர்வெண் அடையாளம் மற்றும் ஒரு மினி ஆண்டெனா உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் இருக்கும் Public Key Infrastructure (PKI) மூலம் உங்கள் பாஸ்போர்ட் முழுமையாக பாதுகாப்பாக இருக்கும். போலி பாஸ்போர்ட் உருவாக்கவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சிம்கார்டு போன்ற ஒரு சிறிய சிப் உள்பக்கத்தில் இருக்கும். முன்பக்கம் தங்க நிறத்தில் ஒரு சின்னம் இருக்கும் — அதுவே இந்த பாஸ்போர்ட் ஒரு “இ-பாஸ்போர்ட்” என அடையாளம் காட்டும்.
இதில் அனைவருக்கும் ஒரு முக்கியமான கேள்வி எழும்: “எனக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் இருக்கே… இப்போ இது வேண்டுமா?” என்று…
அதற்கான பதில்: இல்லை. இது கட்டாயமல்ல. உங்கள் தற்போதைய பாஸ்போர்ட் செல்லுபடியாகும் தேதிவரை இயல்பாகவே செல்லும். ஆனால் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், சில நகரங்களில் இதே இ-பாஸ்போர்ட் தான் வழங்கப்படும்.