தமிழக அரசு ஊழியர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அரசியல் நிலைகளின் பின்னணியில் முக்கியமாக பேசப்படும் ஒரு கோரிக்கையாக வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே, இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வந்தாலும், இவ்வருட இறுதிக்குள் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனும் தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாகவே, அரசு ஊழியர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இது மாநில அரசிற்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், அந்த நிதி இழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் திட்டத்தில் சில மாற்றங்களுடன் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீதான கோரிக்கைகள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுந்துகொண்டு தான் இருக்கின்றன. கடந்த 2003 ஏப்ரல் 1 முதல் தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியபோதும், பழைய திட்டத்திற்கே ஊழியர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இதை மனதில் வைத்துத்தான், தற்போது அரசு ஒரு ஆய்வுக் குழுவை அமைத்து, பழைய, புதிய மற்றும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை ஒப்பிட்டு பரிந்துரை செய்ய உத்தரவிட்டுள்ளது.
நிதி நிலைமை, ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய ஓய்வூதிய அமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், கடைசிவரை அதிருப்தியுடன் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மனதை குளிர்வித்து, எதிர்வரும் தேர்தலில் ஆதரவை திரும்பப் பெறும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது.
இது உண்மையாகவே அமல்படுத்தப்பட்டால், தமிழக அரசியலிலும், ஊழியர்களின் வாழ்வியலிலும் ஒரு புதிய மாற்றம் ஏற்படும் என்பது உறுதி.